தேடித் தோற்றிருக்கின்றேன்

முதலாம் வயதில் என் கை பிடித்து
நடை பழக்கினீர்களாம்
அயலவர்கள் சொன்னார்கள்
அடிக்கடி நான் அசுத்தம் பண்ணிய
ஆடைகளை நீங்களே துவைப்பீர்களாம்
அம்மா சொன்னார்கள்
என் பள்ளிக் கூட அனுமதிச் சீட்டுக்காக
ஆயிரம் தடவைக்கு மேல் அலைந்திருப்பீர்களாம்
ஆசிரியர்கள் அத்தனைபேரும் சொன்னார்கள்

நினைவிருக்கிறதா உங்களுக்கு?
என் நான்கு வயதில்
எனக்கு நிலா வேண்டும் என்று கேட்ட போது
கண்ணாடியில் என்னைக் காட்டி இதோ நிலா இருக்கிறது
என்று சொன்னவர் நீங்கள் தான்
யானை பார்க்கணும் என்ற போது
என்னருகே அமர்ந்து
யானை மேல் ஏற்றிச் சென்றவரும் நீங்கள்தான்
வரும்வழியிலே ஆறு கடக்க
உங்கள் தோள்மேல் ஏற்றி
என்னை கரை சேர்த்தவரும் நீங்கள் தான்

ஞாபகம் இருக்கிறது எனக்கு
ஆண்டுகள் ஒன்றிரண்டு சென்றிருக்கும்
எனக்கும் ஏழு வயது தொடங்கியிருக்கும்- அப்போதும்
உம் கைக்குள் பிணைக்கப்பட்டிருந்த
என் விரலை பிரித்தெடுத்து
எங்கோ தூரத்தே சென்றீர்கள்
விளங்கவில்லை எனக்கு- நீங்கள் செல்வது
வெகு தூரம் என்று
நீங்கள் சென்ற தூரங்கள் தான் என்னுள்
தேடல்களையும் துவக்கி விட்டன

பள்ளிக்கூட பரிசு வாங்கும் நாட்களில்
உம்மை நான் தேடிய நாட்கள் அதிகம்
நண்பர்கள் கூட்டம் 'அப்பா எங்கே' எனும்போது
என் விழிக் கண்ணீர் தேடியதும் உம்மைத்தான்
வயதுக்கு வந்து நான் முதன்முதலாய்
வெட்கப்படுகையில் -என்
ஞாபகங்கள் தேடியதும் உம்மைத்தான்
அநேக நேரங்களில் கும்மிருட்டில் -நான்
கால் குத்தி உட்கார்ந்து -என் 
அழுகைகள் அத்தனையும் உங்களுக்காகத்தான்

தேவைகள் என்றுமே முடியாதனவாம் 
பொருளியலில் யாரோ அறிஞர் சொல்லி 
கேள்விப்பட்டிருக்கிறேன்
அவருக்கு தங்தை இருந்திருப்பார் போல
இல்லாவிட்டால் எழுதியிருப்பார்
தேடல்கள் முடிவே அற்றன என்று

இன்னும் தேடிக் கொண்டுதானிருக்கின்றேன்- ஆனால்
என் தேடல்கள் முற்றுப் பெறும் போது
உஙகள் வயது வற்றிப் போயிருக்கும்
அடையாளம் தெரியாத என்னை நீங்கள்
ஆள விசாரிக்கும் போது- நான்
அப்பா என்று சத்தியமாய்
அழைக்க மாட்டேன்
தேடல்கள் முடிவுற்ற திருப்தியில்
திரும்பி நடந்து சென்று கொண்டேயிருப்பேன்- என் அம்மா
எனக்காக காத்துக் கொண்டு நிற்பார்- தூரத்தே
கண்டாலும் கை நீட்டுவார் -எனை அணைக்க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எனது வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி..