அவனும் மனிதனே - செல்ல அடி (அத்தியாயாம் 02)

அலோய்ஸின்அடுத்த திருமணம்
தனது மருமகள் க்ளாரா போல்ஸூடனானது
அப் பொழுதில் அலோய்ஸ்க்கு 48 வயது
கர்ப்பவதியாய் இருந்த க்ளாராவுக்கு 24

கத்தோலிக்கப் பாதிரியாரின் விஷேட அனுமதியுடன்
தன்னிரு குழந்தைகள் முன்னிலையில்
க்ளாராவை மணந்தார் அலோய்ஸ்

இரண்டு ஆண் கூடவே ஒரு பெண் குழந்தைக்கு
பிறப்பினை வழங்கி
அவர்களது இறப்பினையும் அனுபவித்தனர்
அலோய்ஸ் தம்பதி

ஆனாலும், ஏப்ரல் 20. 1889இல்
தன் 4வது குழந்தையை உலகத்து வழங்கி
பெரிதும் பரவசப்பட்டுப்போனார் க்ளாரா
அதிக அன்புடன் தனக்காக
தக்க வைத்துக் கொள்ள பெரிதும் முயன்று,
அடோல்ப் என்ற பெயரையும் வைத்து
'அடி' என்றும் அழைத்தார்
தன் செல்ல மகனை


அடோல்ப் ஹிட்லர்

52 வயதில் அடோல்புக்கு தந்தையானவர் அலோய்ஸ்
பொழுதுபோக்கிற்கு வழங்கிய முக்கியத்துவத்தை
குழந்தைக்கு வழங்கினார் இல்லை
இருந்தும் அடியின் ஐந்தாவது வயதில்
தம்பி 'எட்மன்ட்' ஐயும் மறுபடி எட்டு வயதில்
தங்கை 'போலா'வையும் வழங்க அவர் மறுக்கவில்லை

மே 1895 இல் ஆறாம் வயதில்
லின்ஸ் ஆஸ்திரியா (Linz Austria) வுக்கு அருகே
பிஸ்ச்செலாம் (Fischlham) கிராமத்தின்
பொதுபள்ளிக்கு செல்கிறார்
எம் சுட்டிப்பையன் அடி

சின்ன அடியின்- அச்சிறு
மனதிலே ஆழப்பதிந்த
இரு விடயங்கள்
இந்த வயதில்தான்

அன்புடன் சஜீ
08-01-2013

அவனும் மனிதனே - ஒரு கிராமத்திலே ஒரு குடும்பம் (அத்தியாயாம் 01)

நாளும் ஓடி களைப்புற்றாலும் நின்று நிதானிக்க நினையாத
நிழல் உலகில்- நாளும்
காணுகின்ற நன்மை செய்த முகங்களை கூட
மறுபடி நினைக்க நேரமில்லாதவர் நாம்

ஆனாலும் வரலாற்றுத் தடங்களில்
கால் ஊன்றி தம்மை உறுதியாக்கியவர்களை
வெறுத்தாலும் கூட நினைவில் நிறுத்தி
நினைவு மையத்தில்
இடம் வழங்க மனது மறுப்பதில்லை

என் மூளைப் பதிவின் சிறு பகுதியை உறுத்துகின்ற
அடோல்ப் ஹிட்லரின் வாழ்க்கைத் தடங்களை இங்கு
தொடர்வதற்காக அவரை
வழங்கிய குடும்பத்தின் கதை இந்த அத்தியாயத்தில்...

1837ஆம் ஆண்டு ஜூன் மாதம் 07ம் திகதி
ஆஸ்திரிய (Austria) நாட்டின் வால்ட்வியட்டல் (Waldviertel) என்கின்ற நகரத்தின்
ஸ்ட்ரோன்ஸ் (Strones) என்கிற கிராமத்தில்
ஒரு பெண்ணின் அழுகைக் குரல்
கூடவே ஒரு குழந்தையினதும்

ஒரு அழகான ஆண் குழந்தைக்கு உடலும் உயிரும்
வழங்கிய மரியா அன்னா சிக்கில்க்ரபர் (Maria Anna Schicklgruber)
சட்டபூர்வமற்ற குழந்தை என்ற அங்கீகாரத்தை
வழங்கியதால்தான் அதிகமாகவே அழுதார் போலும்

தன்னுள் உயிர்பெற்ற அவ்வுயிருக்கு
தன் தந்தையின் பெயர் இணைத்து
அலோய்ஸ் சிக்கில்க்ரபர் (Alois Schicklgruber)
என்று நாமம் வழங்க வேண்டிய கட்டாயம்
தாய் மரியாவுக்கு

பிரான்கன்பேகர் (Frankenberger) யூதக் குடும்பம்
மரியா சமையல் தொழில் செய்த இடம் என்பதும்
அங்கிருந்த 19 வயது மகன் உருவாக்கியவர் தான் அலோய்ஸ்
பிறப்பின் பின்பும் அக்குடும்பப் பணத்தை
அனுபவித்தவர் மரியா போன்ற
ஆதாரமற்ற கருத்துக்கள்
யோசிக்க வைப்பதும் உண்மை தான்

ஐந்து வயது தொடக்கத்தின் போதே தாய்
ஜொஹான் ஜோர்ஜ் ஹிட்லர் (Johann Georg Hiedler) என்பவரைக் கரம் பிடிக்க
ஜொஹான் நெபோமக் ஹிட்லர் (Johann Nepomuk Hiedler) என்கின்ற
தாயின் புதுக் கணவனின் தம்பியுடனான
பண்ணை வாழ்வுடன் தன்னை இணைத்தவர் அலோய்ஸ்
தற்காலிகமான அவ்வாழ்வு
அவருக்கு நிரந்தராமானது
தாயின் இறப்புச் செய்தி கேட்ட பின்னால் தான்

திருப்தி என்பதை எதிலுமே காணாமல்
தேடலிலே ஈடுபடுகின்ற மனிதர்கள்
தொடர்ந்தும் தன்னுள் விருட்சத்தைக்
கண்டு கொண்டுதான் இருப்பர்
நல்லதொரு உதாரணம் அலோய்ஸ்

பண்ணை வாழ்வு பிடிபடாமல்
நகரத்து வாழ்வு நோக்கி நகர்ந்து
சப்பாத்து தொழிலாளியாக
பிழைப்பு நடாத்தத் தொடங்கிய போது
அலோய்ஸ்க்கு 13 வயது

தொடர்ச்சியான விடா முயற்சி
அவருக்களித்த பரிசு
ஆஸ்திரிய சுங்க இலாகாவில் மேற்பார்வையாளர் பதவி.
முடிவுறாத முயற்சி மீண்டும் வழங்கியது
1875இல் அதிஉயர் துணை கண்காணிப்பாளர் பதவி உயர்வு

இறப்பு வரையிலும் தந்தை யாரென அறியாத
சட்டபூர்வமற்ற பிறப்பை எங்கும் சொல்ல தயங்காத
அலோய்ஸ் சிக்கில்க்ரபரை
சிறிய தந்தையின் வேண்டு கோள்கள்தான் மாற்றியது
'அலோய்ஸ் ஹிட்லர்' (Alois Hitler) என்று
அதுவும் 39 வயதிலே

'அலோய்ஸ் ஹிட்லர்' (Alois Hitler)

திருமண வாழ்வில் அலோய்ஸ் நுழைந்தது
36 வயதில் அன்னா க்ளாஸ்ல் ஹோரர் (Anna Glasl-Horer) என்பவருடன்
தொடங்கியது 1873இல்
விவாகரத்தில் முடிவுற்றது 1880 இல்

மறுபடி தொடங்கியது 1883 இல்
பிரான்ஸிஸ்கா மாட்ஸெல்ஸ்பேர்கர் (Franziska Matzelsberger) என்பவருடன்
ஆண் என்றும் பெண் என்றும் இரு தோன்றல்கள்
அலோய்ஸ் ஹிட்லர் ஜூனியர் (Alois Hitler, Jr.)
மற்றும் ஏன்ஜலா ஹிட்லர் (Angela Hitler)
இவருடனான உறவில்தான்
அலோய்ஸ்க்கு கிடைத்தது

1884 இலே பிரான்ஸிஸ்கா மறைவில்
அலோய்ஸ் மூன்றாவது திருமணத்தை நாடினார்
உலகை ஆட்டிய பிறப்பினை
உருவாக்கியதும் இத்திருமணம்தான்

அன்புடன் சஜீ
20-12-2012

அவனும் மனிதனே - நூற்றாண்டு தாண்டியும் முடிவுறாத வெறுப்பு

தினம் தினம் ஓடிக்கொண்டிருக்கும் மனித வாழ்க்கையில் அயலவரைக் கூட அறிய முடியாதவர்களாகிறோம். ஆனாலும் உலகம் சொல்லுகின்ற பெயர்களையும் அவர்களின் சரிதங்களையும் கற்பதிலும் விமர்சிப்பதிலும் என்றுமே எம்மவர்க்கு தனிப் பிரியம் இருப்பது என்னவோ மறுக்க முடியாத உண்மை. இந்ந வகையில் எம் மனதில் நாம் வீரர்களென கருதுபவர்கள் பற்றியோ அல்லது நானும் மனித இனம் என்று சொல்வதற்கு கூச்சப்பட செய்பவர்கள் பற்றியோ தேடிப்படிப்பது சுவாரஸ்யமிக்கது. விரும்பினால் மானசீகமாக அவர்களை தங்கள் வழிகாட்டியாக ஏற்றுக் கொள்வதற்கோ அல்லது வெறுத்து ஒதுக்கி விமர்சிப்பதற்கோ, ஆழச் சென்று அவர்களுடைய முற்பட்ட வாழ்ககையைக் கிளறி ஆராய்வது முக்கியமே.

இதற்காக உலகம் உச்சரிக்கின்ற அநேகமான பெயர்களில் ஓரளவு தனி இடத்தை வகிப்பது 'அடோல்ப் ஹிட்லர்' என்பதை மனது விரும்பியோ விரும்பாமலோ ஏற்க வேண்டித்தான் இருக்கின்றது. கடந்த நூற்றாண்டின் கசப்பு நிறைந்த காலப்பகுதியென அடையாளப்படுத்தக் கூடிய அருவறுப்புப் பகுதி ஹிட்லரின் காலம்தான். வெறும் 56 ஆண்டுகள் பூமியில் சஞ்சரித்த அவருக்கு, முதல் 30 ஆண்டுகள் அவருக்கே அடையாளம் தெரியாது. தன்னுள்ளே கிடந்த சக்தியை திரட்டி எடுத்து பின் வந்த 26 ஆண்டுகள்தான் உலகமே சற்று மூச்சையுற்று, இவன் மனித இனத்துள் அடக்கமா? என்று சந்தேகித்து திரும்பிப் பார்த்து நின்ற காலம். ஹிட்லரின் வாழ்க்கை ஏராளமான எழுத்தாளர்களால் எத்தனையோ மொழிகளில் எழுதிக்குவிக்கப்பட்டது. இந்த பகுதியும் சற்று வித்தியாசமாய், வாசிப்பவரை நின்று நிறுத்தி தொடர்ந்து சுவாரஸ்யமாக ஹிட்லரின் வாழ்க்கையின் உண்மைக் சம்பவங்களை அறிந்து கொள்ளுவதற்காக தொடர்ந்தும் எழுதப்படப்போகிறது.

அன்புடன் சஜீ
12-12-2012

“Billa-II”- எனது வித்தியாசமான முயற்சி

அறக்கப் பறக்க
ஆட்டோ பிடித்து
இருட்டிய தியேட்டர்க்குள்
தடுமாறி நடந்து
தட்டுப்பட்ட இருக்கையில் அமர்ந்து
தலயின் Billa-II வில் ஐக்கியமானேன்

ஆரம்பம் ஆர்ப்பாட்டமின்றி
அமைதியாய் அகதி முகாமில்
அவதியான வாழ்க்கையுடன் தொடங்க
‘அகதிகள் தான், ஆனால் அனாதைகள் இல்லை’
அழுத்தமான வசனம் நெஞ்சைத் தொட்டது

ஆரம்பத்திலே அதட்டும் அதிகாரியை
அலட்டாமல் உயிர் வாங்கும் காட்சி
அற்புதம்

‘உட்கார்ந்து வேல வாங்கிறவனுக்கும்
உசிரக் குடுத்து வேல செய்றவனுக்கும்
வித்தியாசம் இருக்கு’
அடிக்கடி சொல்லும் இவ்வசனமும்
அபாரம்

‘சொன்ன நேரத்துக்கு முன்னே போனா வேற வேல இல்லாதவன்னு நெனச்சுடுவாங்க
லேட்டா போனா பொறுப்பில்லாதவன்னு சொல்லுவாங்க,
சொன்ன நேரத்துக்கு போனாத் தான் நம்ம மேல நம்பிக்க வரும்’
நேரத்துக்குச் சொல்லும்
நேர்த்தியான வசனம்

‘நல்லவங்களக் கண்டுபிடிக்கிறது
ரொம்பக் கஷ;டம்’
உண்மையான வசனம்- சற்று
உறுத்துவதும் கூட

‘இதுவரைக் காட்டிக் குடுத்தவங்க எல்லாம்
கூட இருந்தவங்கதான் சரித்திரத்தைப் புரட்டிப் பாரு
சான்றுகள் இங்கும் நிறைய உண்டு
சாட்டையடியான வசனம்

‘ஆசையில்லை: பசி’
ஆணிவேர் வசனம்
ஆக்கிரமித்தது திரைக்கதையை
அத்தனை அர்த்தமும் இதுதான்

அத்தனை வில்லன்களும் ஒரே உலகில்
அனைவரையும் சமாளிக்கிறார்
அவருக்கு எதுவுமே நிகழ்வதில்லை

தடார் இங்கே ஒருத்தன் விழ
டுமீல் அங்கே உயிர் விழுகிறது
சகிக்க முடியவில்லை
உயிருக்கு இந்த அளவிற்கா மதிப்பில்லை

அழகிய அஜித்துக்கு
அவ்வளவுக்கு கதாநாயகி
அற்பமா திரையுலகில்

என் அனுபவத்தில் சொல்கிறேன்
என்னதான் இருந்தாலும்
உன்னைப் போல் ஒருவன் போலல்ல
சக்ரி டோலேட்டி அவர்களே
சற்று சறுக்கலாய்த்தான் இருக்கும்

வசனத்திற்கு மார்க் வழங்கலாம்
இரா முருகன் இன்னும்
நீண்ட காலம் நிலைத்து நிற்பார்

இசை ஆக்கிரமத்தது
இதமாயும் இருந்தது
யுவனுக்கு நிச்சயமாய்
புது வரவுகள் உண்டு

என் ஆசை ரசிகன் அருகிலிருந்தும்
ரகசியமாய் ரசித்தேன் ‘தல’ யை

அற்புதமான நடிப்பு
அழகான நடை
அள்ளுகிறார் நெஞ்சை
‘தல’ என்றுமே ‘தல’ தான்

- For the request of my partner

நிமிர்ந்த நெஞ்சம்

நினைப்பில் வலி
நெஞ்சை இறுக்கும் நிகழ்ச்சி
யாருமற்ற மழலை வீலிடும் சத்தம்
எட்டிப்பார்த்து
கிட்டச் சென்று
தலை தடாவி
நெற்றி முத்தம் தந்து
திரும்ப நடக்கையில்
கை தூக்கி என்
விரல் பிடிக்கையில்
துடிக்கின்ற இதயம்
முதல்முறை 
சந்தோசத் துவளலில்
துள்ளித்தான் திரிந்தது