“Billa-II”- எனது வித்தியாசமான முயற்சி

அறக்கப் பறக்க
ஆட்டோ பிடித்து
இருட்டிய தியேட்டர்க்குள்
தடுமாறி நடந்து
தட்டுப்பட்ட இருக்கையில் அமர்ந்து
தலயின் Billa-II வில் ஐக்கியமானேன்

ஆரம்பம் ஆர்ப்பாட்டமின்றி
அமைதியாய் அகதி முகாமில்
அவதியான வாழ்க்கையுடன் தொடங்க
‘அகதிகள் தான், ஆனால் அனாதைகள் இல்லை’
அழுத்தமான வசனம் நெஞ்சைத் தொட்டது

ஆரம்பத்திலே அதட்டும் அதிகாரியை
அலட்டாமல் உயிர் வாங்கும் காட்சி
அற்புதம்

‘உட்கார்ந்து வேல வாங்கிறவனுக்கும்
உசிரக் குடுத்து வேல செய்றவனுக்கும்
வித்தியாசம் இருக்கு’
அடிக்கடி சொல்லும் இவ்வசனமும்
அபாரம்

‘சொன்ன நேரத்துக்கு முன்னே போனா வேற வேல இல்லாதவன்னு நெனச்சுடுவாங்க
லேட்டா போனா பொறுப்பில்லாதவன்னு சொல்லுவாங்க,
சொன்ன நேரத்துக்கு போனாத் தான் நம்ம மேல நம்பிக்க வரும்’
நேரத்துக்குச் சொல்லும்
நேர்த்தியான வசனம்

‘நல்லவங்களக் கண்டுபிடிக்கிறது
ரொம்பக் கஷ;டம்’
உண்மையான வசனம்- சற்று
உறுத்துவதும் கூட

‘இதுவரைக் காட்டிக் குடுத்தவங்க எல்லாம்
கூட இருந்தவங்கதான் சரித்திரத்தைப் புரட்டிப் பாரு
சான்றுகள் இங்கும் நிறைய உண்டு
சாட்டையடியான வசனம்

‘ஆசையில்லை: பசி’
ஆணிவேர் வசனம்
ஆக்கிரமித்தது திரைக்கதையை
அத்தனை அர்த்தமும் இதுதான்

அத்தனை வில்லன்களும் ஒரே உலகில்
அனைவரையும் சமாளிக்கிறார்
அவருக்கு எதுவுமே நிகழ்வதில்லை

தடார் இங்கே ஒருத்தன் விழ
டுமீல் அங்கே உயிர் விழுகிறது
சகிக்க முடியவில்லை
உயிருக்கு இந்த அளவிற்கா மதிப்பில்லை

அழகிய அஜித்துக்கு
அவ்வளவுக்கு கதாநாயகி
அற்பமா திரையுலகில்

என் அனுபவத்தில் சொல்கிறேன்
என்னதான் இருந்தாலும்
உன்னைப் போல் ஒருவன் போலல்ல
சக்ரி டோலேட்டி அவர்களே
சற்று சறுக்கலாய்த்தான் இருக்கும்

வசனத்திற்கு மார்க் வழங்கலாம்
இரா முருகன் இன்னும்
நீண்ட காலம் நிலைத்து நிற்பார்

இசை ஆக்கிரமத்தது
இதமாயும் இருந்தது
யுவனுக்கு நிச்சயமாய்
புது வரவுகள் உண்டு

என் ஆசை ரசிகன் அருகிலிருந்தும்
ரகசியமாய் ரசித்தேன் ‘தல’ யை

அற்புதமான நடிப்பு
அழகான நடை
அள்ளுகிறார் நெஞ்சை
‘தல’ என்றுமே ‘தல’ தான்

- For the request of my partner

நிமிர்ந்த நெஞ்சம்

நினைப்பில் வலி
நெஞ்சை இறுக்கும் நிகழ்ச்சி
யாருமற்ற மழலை வீலிடும் சத்தம்
எட்டிப்பார்த்து
கிட்டச் சென்று
தலை தடாவி
நெற்றி முத்தம் தந்து
திரும்ப நடக்கையில்
கை தூக்கி என்
விரல் பிடிக்கையில்
துடிக்கின்ற இதயம்
முதல்முறை 
சந்தோசத் துவளலில்
துள்ளித்தான் திரிந்தது

தவம்

ஒரு கை மார் தொட
மற்றையது மெத்தையில் நீளும்
பாதி உடல் கீழே சரிய
மீதி உடம்பில் ஒட்டும்
ஒற்றைக் கால் மடக்கி 
கால் மீது தவளும்
அடுத்த கால் நீட்டி 
மற்றைக் கால் பின்னும்
சுவாச ஓசை பிறை நுதல் கொள்ள
இரு விரல் கொண்டு கேசம் தடவும்
இதய ஓசை காதினுள் செல்ல
கனவு நிலையிலும்
நிம்மதி காணும்

ஆனந்தம் கொள்கிறேன்...

தாவித் தாவி ஓடி- பின்
தன் வழியே திரும்பும்
தங்க நிறம் அவை

சிறியவர் உண்டு
பெரிதாய் ஏப்பம் விட
மெதுவாய் நீந்தும்
பொருந்திய இரையை
பொசுக்கென கவ்வும்
கறுப்பு நிறம் அவை

அசைய முடியாத- ஆயினும்
ஆணவம் அவற்றுக்கு
சுவாசம் வழங்கி- தானும்
சுவாசம் கொள்வதாய்

விசேடமாய் ஒன்று
வீதிக்கடையெல்லாம் தேடி
விரைவில் கிடைக்கவில்லை
விருதாக நண்பன் கொடுத்தான்
விரவிய சந்தோசத்தில்
விழுந்து அடித்து ஓடி
விட்டு விட்டேன்
கழிவுகள் அனைத்தும்
கண்ட வயிறு கொண்டது
களிப்பாய்த்தான் கிடக்குது

வழிப்பயணம் முடித்து
வீடு திரும்பிய வழியில்
வடிவாய் சில வண்ண
சுழியோடிகள் கண்டேன்
பிளாத்திக்குத் தான்
பரவாயில்லை பார்க்க அழகு
பையினுள் போட்டேன் பின் வந்து
பொருத்தி மின்னும் வழங்கினேன்

அடிக்கடி கழுவி- என்னை
ஆசுவாசப்படுத்துவது பெரும்பாடு
ஆராத்துயர் கொண்டு
ஆழ்கையில் - நான்
ஆனந்தம் பெறுவது- என்
அழகு மீன் தொட்டியில்தான்

அத்தனையும் ஒரு நாளில்…

விஞ்ஞானத்தில் சொல்லிக் கொடுத்தார்கள்
விந்தைகள் கொண்ட கரு உருவாக்கத்தை
விந்துகள் செலுத்தப்படுவது ஆணிலிருந்தாம்
விரைந்தவை கருவாவது பெண்ணிலிருந்தாம்

அவ்வுருக் கொடுத்த ஆண்தான் அப்பாவாம்
அவை பெற்று எமை உருவாக்கி
அவளுயிர் ஈந்து கருவாக்கி
அகிலத்தைக் காட்டுபவள் அம்மாவாம்

அப்பா இருந்திருக்க வேண்டும்
அவரால் தான் கருவாக்கப்பட்டிருப்போம்
அன்னையும் இருந்திருப்பாள்
அதனால்தான் உயிர்த்திருக்கிறோம்

நாட்களும் நகர்கின்ற போது
நாண்டுவிடுகின்றனர் மனிதர்கள்
நகர்ந்த நாட்களினூடே
நாடியடங்கியவர்களின் பிள்ளைகள் நாங்கள்

ஆயுள் முடிந்து போயினர் பெற்றோர்
அதற்காக நாங்கள் அநாதையில்லை
ஆண்டுகள் கடக்கின்ற போது
ஆயுட்கள் ஒவ்வொன்றும் முடிந்துதான் போகும்
அத்தனை உயிரும் -ஒரு நாளில்
அநாதையாய்த்தான் ஆகும்

உங்கள் ஞாபகத்துடன்…

பல்கலைக் கழக இறுதி நாளில் என் தோழியர் சங்மத்தில் என் வீடு முத்தையா விடுதியில் என்னால் பகிரப்பட்டது.. என்றும் உங்கள் ஞாபகத்துடன் நான் இங்கு..
என் பிரிய தோழிக்கு,
உன் பிரிய தோழியிடமிருந்து,
வரையப்பட்ட இம் மடல்
உன்னால் உணரப்படுகின்ற போது – நான்
உன்னுடனான பொழுதுகளை முடித்துக் கொள்வதற்கான
நிமிடத்துடன்
இன்னும் சில நிமிடங்களில்…
இன்னும் சில விநாடிகளில்…
பயணித்துக் கொண்டிருப்பேன்
சந்தோசித்த – எம் காலங்கள்
சிறகடித்த – எம் நினைவுகள்
சில கணங்களில்,
சிதறுண்டு போன – எம்
சிறு துளி அழுகைகளும்
சேருமிடம் இன்றுதான்…
நீண்ட – எம்
வருடங்கள்
வாழ்ந்த காலங்களில்
நான்கில் மூன்று பங்கினை
கூடிக்குலவி
கும்மாளமிட்டுச் சிரித்து
குதூகலமாய்த்தான்
உன்னுடன்
உறவாடிக் கழித்திருக்கின்றேன்…
என் ஒற்றைச் சிறகு கொண்டு
நான் பறக்கத் துடித்த
தருணங்களில் – உன்
மற்றைய சிறகு கொண்டு
சோடிச் சிறகுகளால் – நாம் பறந்து
வான் தொட்ட காலங்கள்
உனக்கு நினைவிருக்கின்றதா?
பறந்து திரிந்து – எம் சிறகுகள்
ஓய்வு தேடி ஏங்குகின்ற போது
வேடந்தாங்கலாய் – எமைத்
தத்தெடுத்த மண்
இந்த முத்தையா மண் தான்
எத்தனையோ நிமிடங்கள் – இந்த
பாத்ரூம் குழிகளிலும்,
அங்காங்கே – எமக்காய்
பரவவிட்டு – மரம் கூட வேர் விட்டு,
நாம் கதைகள் பேசிச்
சிரிக்க இடமளித்த – இவ்
வேர்த் தண்டுகளிலும் ¬– எம்
பாசங்கள் பரிமாறப்பட்ட நிமிடங்கள்
உனக்கு என்றேனும் மறக்குமா?
உன் காதல் நேரங்களில்
களிப்புற்றக் கிடந்தவை
காயப்பட்டுத் தோற்றுப் போனவை – எல்லாமே
என் காதோரம் சொல்லி
என் மடி நனைத்த கதை
என்றாவது நினைவில் கொள்வாயா?
சோறூட்டுவதற்கு – நீ
உன் விரலை
என் வாய்க்குள் திணிப்பதும்,
நான் உன் விரல் கடிப்பதும்…
கடிபட்ட காயம் ஆறு முன்னே
மருந்தாக – நாம்
கூடி நகைத்ததும்
உன் நெஞ்சுக் கூண்டில் – என்றைக்கும்
நிலைத்திருக்குமா?
பரீட்சைகள் – எமக்குப்
பழகிப் போனவை…
படிக்கும் நேரங்களில் – எம்
பல்லிளிப்புகளும்
பல கோடி நினைவுகளும்
பலரது கதைப் பேச்சுகளும்
புதியனவாகவே என்றும்
பிறக்கின்றனவே…
பழகிய உன்னால் – என்றாவது
மீட்டிப் பார்க்கப்படுமா?
புகைப்படங்களில் தேடப்படப் போகின்ற – என் முகமும்
ஓட்டோக்ராபில் எழுதப்பட்ட – என் வாசகமும்
எதிர்காலத்திலும்
எனக்கு இடமளிக்குமா?
மாறப் போகின்ற
நினைவலைகள் – உன்னால்
மறக்கடிக்கப் போகும் – என்
ஞாபகங்கள் – என்றைக்காவது
மீட்டப்படும் – அந் நேரம்
துளிக் கண்ணீர் விடு…
எமக்காய்…
எம் நட்புக்காய்…
எம் அன்புக்காய்…
உன் ஒற்றை விழிக் கண்ணீர்த்துளி
உலகைப் பார்க்கப் புறப்படும் போது – அதன்
பயணத்தை முடிக்கச் செய்யும்
ஒற்றை விரல்
எனதாக இருக்கும்…
இல்லையேல்,
கூடப் பயணிக்கும்
மற்றைய விழிக் கண்ணீர்த் துளி
எனதாக இருக்கும்…
அடி மனத்து விளிம்புகளில் இருந்து
உன் பிரிய தோழி,
பாத்திமா இன்ஸாப் ஏ.எம்.