வரலாறு படைக்கின்றோம்

வற்றிப்போன மகிழ்ச்சிகளுடனும்வலித்துக் கொண்டேயிருக்கும் மனத்துடனும்வாழ்ந்து கொண்டிருக்கும் எம்மில்வரலாறு படைக்கவழி தேடுகிறீர்கள்வாழ்நாள் சாதனையாளர் விருதுவழங்கப்படுவது நிச்சயம் உங்களுக்கு
ஈழத்தமிழர் என- எம்மை
ஈட்டியெடுத்து குத்திய நாட்கள் மறந்து- பல்
இளித்துக் கொண்டே வருகின்றீர்கள்
இனி சமாதானம், சுகஜீவனம்
இன்பமயமான வாழ்க்கை என்று
எம்மில் பலருக்கு இன்னும்
எம் சொந்த இடம் எதுவெனப் தெரியாது
பாதிநாட்களை நாம் கழித்தது
பங்கரிலும், முகாமிலும் தான்- மற்றைய
பாதிக்கு பயப்படத் தேவையில்லை- எம்
பாழடைந்த வீடுகளும் தோட்டங்களும்
பழையபடி எமக்கு கிடைக்கும் உறுதி
பதிவுத் திட்டம் இன்னும்- எம்
படிகளுக்குத் தான் வரவில்லை
சிசுவாகப் பிறந்த -எம்
சிறுசுகள் முதல் கேட்ட ஓசை
‘செல் அடிக்கிறான்கள் அந்தா ஓடுங்கோ’
செல்லமாக எமை ‘அம்மா’ என அழைக்க
சொல்லிக் கொடுக்க எமக்கு
சிந்தனை ஓடவில்லை
சிந்திக்க தாமதித்தால்
சிசுவும் இல்லை- எங்கள்
சிரசும் இல்லை- இப்போது
சிரித்துக் கொண்டே சொல்கிறோம்- வளர்ந்த
சிறுசுகளுக்கு ‘அம்மா’
சொல்லிக் கொடுக்க
சிறந்த திட்டம் கொண்டுவரப்பட வேண்டும்
பள்ளிக் காலத்தில்
பழம் பொறுக்கிப்
பரிசு வாங்கி –எம்
பயல்களுக்கு ஞாபகமில்லை
பங்கர் பதுங்கலுக்கு
பரிசு வழங்கப்படவுமில்லை-
பதுங்கிய பங்கர்களுக்கும்
பொறுக்காத பழங்களுக்கும் சேர்த்து –ஒரு
பதுங்கிப் பழம் பொறுக்கலுக்கு புதிதாய்
போட்டித் திட்டம் பரவலாக்கப்பட வேண்டும்
அபிவிருத்தி என்றும் அரச நலத் திட்டம் என்றும்
அநேகம் பேர் அலைந்து திரிகின்றார்கள்
ஆயுள் முடிந்தது தெரியாமல்
அந்திரேட்டிக் கிரியை முடித்த
அன்னையர்களுக்கு
ஆயிரம் அம்மாக்கள் அஞ்சலித் திட்டம்- என்று
அனுதாபத் திட்டம் ஆரம்பித்தாலும்
ஆச்சரியப்படுவதற்கில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எனது வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி..