மரணிக்கும் வேளையிலும்…

ஒய்யாரமாய் இதழ் விரித்துஒயிலாய்த் தான் குரல் எழுப்பிஒட்டி ஒட்டியே உடன் வந்தேன்ஒரு நாள் ஆம் என்றாள்
கூடல் வேண்டு மென்றாள்
குறிப்பெடுத்து நாள் பார்த்து
குறித்த நாள் இன்றுதான்
குதூகலம்தான் எனக்கு
மணவாளன் எனைக் காண
மல்லாக்கக் கிடந்தாள்
மணம் வீசி அழைத்து
மையலுடன் எனைத் தழுவினாள்
மயங்கிக் கிடந்தேன் நான்
மதுவுண்டு கழித்து
மகரந்தச் சேர்க்கையில்- என்
முழு உடலும் வியர்த்து
ஆ… என்ன சுகம்
ஆனந்தம் அடக்கி வைத்து- எனை
அடைக்கலம் புகச் செய்த
ஆரணங்கு என்னவள்
ஆராதிப்பேனடி உனை
ஆயுட்காலம் முழுவதும்
ஆ.. ஆ… அலறித் துடித்தாள்
ஆத்திரத்துடன் திரும்பினேன்
ஆரவரமாய்த்தான் பறித்து
ஆனந்தமாகவே பகிர்கின்றான்
அறிவிலா ஆடவன்- தன்
ஆருயிர் காதலிக்கு
ஆவேசமாய்க் கொட்டினேன்
அவன் காதலிக்கு
ஆணவமாய் கசக்கி
அப்பால் வீசினான்
மரணிக்கும் வேளையிலும்
மிடுக்குடன் சொல்கிறேன்
முட்டாள் மனிதனே- உன்
மனதுக்கு தெரியப்படுத்து
மற்றவர் வலி உணரப் பயிற்சி கொடு- தான்
மட்டுமே வாழும் மந்த புத்தியை மறந்துவிடு

2 கருத்துகள்:

  1. நல்லதொரு படைப்பு அருமையாக இருக்கிறது தொடர்ந்தும் எழுத வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. நன்றி சிட்டுக்குருவி அவர்களே.. எப்போதும் உங்கள் ஆதரவும் வாழ்த்தும் எனக்கு வேண்டும்.

    பதிலளிநீக்கு

எனது வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி..