உங்கள் ஞாபகத்துடன்…

பல்கலைக் கழக இறுதி நாளில் என் தோழியர் சங்மத்தில் என் வீடு முத்தையா விடுதியில் என்னால் பகிரப்பட்டது.. என்றும் உங்கள் ஞாபகத்துடன் நான் இங்கு..
என் பிரிய தோழிக்கு,
உன் பிரிய தோழியிடமிருந்து,
வரையப்பட்ட இம் மடல்
உன்னால் உணரப்படுகின்ற போது – நான்
உன்னுடனான பொழுதுகளை முடித்துக் கொள்வதற்கான
நிமிடத்துடன்
இன்னும் சில நிமிடங்களில்…
இன்னும் சில விநாடிகளில்…
பயணித்துக் கொண்டிருப்பேன்
சந்தோசித்த – எம் காலங்கள்
சிறகடித்த – எம் நினைவுகள்
சில கணங்களில்,
சிதறுண்டு போன – எம்
சிறு துளி அழுகைகளும்
சேருமிடம் இன்றுதான்…
நீண்ட – எம்
வருடங்கள்
வாழ்ந்த காலங்களில்
நான்கில் மூன்று பங்கினை
கூடிக்குலவி
கும்மாளமிட்டுச் சிரித்து
குதூகலமாய்த்தான்
உன்னுடன்
உறவாடிக் கழித்திருக்கின்றேன்…
என் ஒற்றைச் சிறகு கொண்டு
நான் பறக்கத் துடித்த
தருணங்களில் – உன்
மற்றைய சிறகு கொண்டு
சோடிச் சிறகுகளால் – நாம் பறந்து
வான் தொட்ட காலங்கள்
உனக்கு நினைவிருக்கின்றதா?
பறந்து திரிந்து – எம் சிறகுகள்
ஓய்வு தேடி ஏங்குகின்ற போது
வேடந்தாங்கலாய் – எமைத்
தத்தெடுத்த மண்
இந்த முத்தையா மண் தான்
எத்தனையோ நிமிடங்கள் – இந்த
பாத்ரூம் குழிகளிலும்,
அங்காங்கே – எமக்காய்
பரவவிட்டு – மரம் கூட வேர் விட்டு,
நாம் கதைகள் பேசிச்
சிரிக்க இடமளித்த – இவ்
வேர்த் தண்டுகளிலும் ¬– எம்
பாசங்கள் பரிமாறப்பட்ட நிமிடங்கள்
உனக்கு என்றேனும் மறக்குமா?
உன் காதல் நேரங்களில்
களிப்புற்றக் கிடந்தவை
காயப்பட்டுத் தோற்றுப் போனவை – எல்லாமே
என் காதோரம் சொல்லி
என் மடி நனைத்த கதை
என்றாவது நினைவில் கொள்வாயா?
சோறூட்டுவதற்கு – நீ
உன் விரலை
என் வாய்க்குள் திணிப்பதும்,
நான் உன் விரல் கடிப்பதும்…
கடிபட்ட காயம் ஆறு முன்னே
மருந்தாக – நாம்
கூடி நகைத்ததும்
உன் நெஞ்சுக் கூண்டில் – என்றைக்கும்
நிலைத்திருக்குமா?
பரீட்சைகள் – எமக்குப்
பழகிப் போனவை…
படிக்கும் நேரங்களில் – எம்
பல்லிளிப்புகளும்
பல கோடி நினைவுகளும்
பலரது கதைப் பேச்சுகளும்
புதியனவாகவே என்றும்
பிறக்கின்றனவே…
பழகிய உன்னால் – என்றாவது
மீட்டிப் பார்க்கப்படுமா?
புகைப்படங்களில் தேடப்படப் போகின்ற – என் முகமும்
ஓட்டோக்ராபில் எழுதப்பட்ட – என் வாசகமும்
எதிர்காலத்திலும்
எனக்கு இடமளிக்குமா?
மாறப் போகின்ற
நினைவலைகள் – உன்னால்
மறக்கடிக்கப் போகும் – என்
ஞாபகங்கள் – என்றைக்காவது
மீட்டப்படும் – அந் நேரம்
துளிக் கண்ணீர் விடு…
எமக்காய்…
எம் நட்புக்காய்…
எம் அன்புக்காய்…
உன் ஒற்றை விழிக் கண்ணீர்த்துளி
உலகைப் பார்க்கப் புறப்படும் போது – அதன்
பயணத்தை முடிக்கச் செய்யும்
ஒற்றை விரல்
எனதாக இருக்கும்…
இல்லையேல்,
கூடப் பயணிக்கும்
மற்றைய விழிக் கண்ணீர்த் துளி
எனதாக இருக்கும்…
அடி மனத்து விளிம்புகளில் இருந்து
உன் பிரிய தோழி,
பாத்திமா இன்ஸாப் ஏ.எம்.

4 கருத்துகள்:

  1. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

    நல்லா இருக்கு...படிக்கும் போது ஒரு இடத்தில் புன்னகை மன்னன் படமும் ஞாபகத்துக்கு வந்தது....:)

    பதிலளிநீக்கு
  2. நன்றி சிட்டுக்குருவி நண்பா.. எவ்விடத்தில் நீங்கள் புன்னகை மன்னனை உணர்ந்தீர்கள் என்று குறிப்பிட்டுக் கூறுவது என்னை ஆறுதல்படுத்தும்...

    பதிலளிநீக்கு
  3. நான்
    உன்னுடனான பொழுதுகளை முடித்துக் கொள்வதற்கான
    நிமிடத்துடன்
    இன்னும் சில நிமிடங்களில்…
    இன்னும் சில விநாடிகளில்…
    பயணித்துக் கொண்டிருப்பேன்//

    இவைகள் தான் அவை நண்பரே...எனக்கு தோன்றியதை தான் சொன்னேன்

    பதிலளிநீக்கு
  4. நன்றி நண்பா.. எனது பல்கலைக்கழக் இறுதி நாளின் போது என் நண்பிகளைப் பிரிகின்ற இறுதித் தருவாயில் என்னால் எழுதப்பட்டது.. அச்சந்தர்ப்பம் இவ்வாறுதான்.. எனக்கு தோன்றவில்லை.. நன்றி உங்கள் ஆதரவுக்கு.. தொடர்ந்து உங்கள் ஆதரவைப் பெற அவா..

    பதிலளிநீக்கு

எனது வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி..